இந்தப் பெண்ணுக்கு அவள் காதலை அளக்க ஒரு அடிக்கோலும் கிடைக்கவில்லை.
அது மட்டுமல்ல; காதல் என்பது முகத்தலளவையா நீட்டலளவையா என்பதிலும் குழப்பம்.
காதல் என்பது 2D யா 3D வடிவமா என்பதும் புரியவில்லை.
எது எப்படியோ தன் காதல் ஆழ அகலங்களில் ஒப்பிடமுடியாதது என்று நினைக்கிறாள்.
அதனால் தான் இப்படிச் சொல்கிறாள்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
(குறுந்தொகை)
அதாவது, தன் காதல் நிலத்தைவிட அகலமானது, வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது என்பதே அவள் சொல்லும் பொருளாகும்.
2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த அந்தக் கேள்வி போலவே ஒன்று இது.
How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight.
-Elizabeth Barrett Browning
தனது உள்ளம் எவ்வளவு உயரம், எவ்வளவு ஆழம், எவ்வளவு அகலம் செல்லுமோ அவ்வளவு அளவு காதல் என்று கூறுகிறாள் இந்தப் பெண்.
தன் காதலைப் பற்றிய பெருமை, வியப்பில் காதலின் நீள அகல உயரத்தை அளக்க முயன்று ஏற்ற அளவின்றித் தவிக்கிறார்கள். அந்தத் தவிப்புத்தான் இன்றும் வியப்புக்குரியது.
காதலர்கள் எங்கிருப்பினும் ஒரே மொழியில் தான் பேசுவார்கள் போல!
இல்லையென்றால் குறுந்தொகைக் காதலியும் எலிசபெத் பிரவுனிங்கும் தங்கள் காதலுக்கு நீள அகல உயரம் பார்ப்பார்களா என்ன?
Comments
Post a Comment
Your feedback