பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்..
சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
சேக்கிழார் எப்படி அந்த முதல் அடியைப் பற்றிக்கொண்டாரோ
அதே போல் தனக்கும் 'உ, து' வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
அதை ஒரு சுவாரஸ்யமான சென்டிமென்ட் என்று எடுத்துக் கொண்டாலும் சரி தான்.
அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 115. ஒன்றிரண்டு நாவல்கள் தவிர அவரது அனைத்து நாவல்களும் 'உ' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் முடிகின்றன.
முறையான எந்தப் படிப்பும் இல்லாமல் கல்யாணம் செய்துகொடுக்கப்பட்ட கோதைநாயகியை கல்வி அறிவு தந்து ஒரு படைப்பாளியாக அறிவுலகம் போற்றும் அளவுக்கு உயர்த்தியது அவரது மாமியாரின் அதீத அக்கறை.
5 வயதில் அவருக்குத் திருமணம். கணவனுக்கு வயது அப்போது 9.
எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு வாய்மொழிக் கதைகள் தான் வழிகாட்டியாக இருந்தன.
நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி எல்லாம் இப்படிப் படித்துக் கொண்டவைதான்.
திருமணம் ஆன பின் தான் முறையாகத் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கற்றுக் கொண்டார். தன் தோழியர் நடுவில் விளையாட்டுப் போக்கில் கதை சொல்லத் தொடங்கி அது அவரது திறமையை அடையாளம் காட்டுவதாக மாறியது.
பத்திரிக்கைத் துறையில் அவர் நீண்ட காலம் பத்திரிக்கை ஆசிரியர், வெளியீட்டாளர் என புகழ் பெற்றார். முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு மேடையில் இசைப் பாடல்கள் பாடி வந்தார். அவர் எழுதிய இசைப் பாடல்கள் ( கீர்த்தனைகள்) புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
திரைப்படத் தணிக்கை துறையிலும் பணியாற்றியிருக்கிறார்.
இன்று உரைநடைத் தமிழ் என்றால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
படிப்பறிவில்லாத ஒரு பெண்ணுக்குள் இத்தனை ஆளுமை. ஒரு பெண்ணால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சரியான பதில் கோதைநாயகி அம்மாள் வாழ்க்கை.
Comments
Post a Comment
Your feedback