அவன் ஊரில் காஞ்சி மரங்கள் நிறைந்த தோட்டங்கள் இருக்கின்றன. அங்கே உள்ள வயல் வெளியில் குளம் போல நீர் நிறைந்திருக்கும்.
அந்தக் குளத்தில் உள்ள நாரைகள் மீன்களை வாயில் கவ்விக்கொண்டு போகும்.
அப்படிப் போன ஒரு நாரையின் வாயிலிருந்து தப்பித்து, குளத்தில் விழுந்த கெண்டை மீன் அந்தக் குளத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மொட்டுக்களைப் பார்த்து இதுவும் நாரை என்று நினைத்துப் பயப்படும்.
உன் கணவனின் தோழனாக இருந்த ஒரு பாணன் உன்னிடம் பொய் சொல்லிவிட்டான் என்பது உண்மை தான். அதற்காக, எல்லாப் பாணனும் உன் கண்களுக்கு பொய்யர்களாகவே தெரிகிறார்கள்.
தாமரை மொக்கை நாரை என்று நினைத்து நடுங்கிய அந்த அப்பாவிக் கெண்டை மீனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?
பொய்யர்கள் இருக்கும் இந்த பூமியில் தான் என்னைப் போல நல்லவர்களும் இருக்கிறார்கள்.
குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே.
(ஓரம்போகியார் - குறுந்தொகை 127)
சொல்லும் பொருளும்:
குருகு - நாரை
உரு - தோற்றம் / நிறம்
கெழு - பொருந்திய
வான் - வெண்மை
முகை - மொட்டு
வெரூஉம் - அஞ்சும்
கழனி - வயல்
படப்பை -தோட்டம்
காஞ்சி -காஞ்சி மரம்
அகன்றிசினோர் - கணவனைப் பிரிந்து தனித்திருப்பவர்கள்
Comments
Post a Comment
Your feedback