வினாக்கள் இல்லையென்றால் அறிவு வளர்ச்சி சாத்தியமில்லை.
ஒரு கேள்வி மனதுக்குள் வரும் போதே ஆர்வமும் கூடவே வந்துவிடுகிறது.
பார்ப்பதெல்லாம் அதிசயமாகத் தோன்றுவதால் தான் குழந்தைகள் துறுதுறுவென்றிருக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே குழந்தைகள் எப்போதும் எதையாவது ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
அந்தக் கேள்வி கேட்கும் ஆர்வம் எப்போதும் மழுங்கடிக்கப்படாமல் பார்த்துக் கொண்டால் அந்தக் குழந்தை அறிவில் சிறந்த குழந்தையாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
யார் அப்படி மழுங்கடிக்கிறார்கள்?
அந்தத் தவறு ஆசிரியர்களால் தான் பெரும்பாலும் நடக்கிறதாம். அடுத்து அந்தக் குழந்தைக்கு அப்படி முட்டுக்கட்டை போடுபவர்கள் வேறு யாருமில்லை. அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் தான்.
"ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள ஆறு பேர் வேண்டும். அந்த ஆறு பேர் WHAT, WHY, WHEN , HOW, WHERE AND WHO" என்று சொல்லுவார் Rudyard Kipling.
I keep six honest sering men;
They taught me all I know;
Their names are What and Why and When
And How and Where and Who.
-Rudyard Kipling.
எப்பொருளும் என்னெஞ்சம் ஏற்க உணர்த்தியவர்
இப்புவியில் தொண்டர் இருமூவர்- எப்பொழுது
யார் எங்கே இருக்கிறார்கள் ஏன் என்ன எப்படி என்கின்ற
பேர்கொண்டார் அன்னவரைப் பேணு.
என்பது அதன் தமிழ் வடிவம்.
தமிழ் இலக்கண நூல் நன்னூல் இதை வேறு மாதிரிச் சொல்லும்.
அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்.
(நன்னூல் நூற்பா 385)
புதிய செய்திகள், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய வாய்ப்புகள், புதிய பாடம், புதிய முயற்சி, புதிய விளையாட்டு என பல வழிகளில் அந்த ஆறு பேரும் ஒரு குழந்தையோடு வந்து சேர்வர்.
எந்த வழிகளிலெல்லாம் கேள்விகள் வர வாய்ப்பிருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் அடைத்துவிட்டு அறிவைப் புகட்ட நினைப்பது சாத்தியமில்லை என்பது தெரியும்.
ஆனாலும் 'மண்ணில் விளையாடக் கூடாது' தொடங்கி 'தொடாதே உடைத்து விடுவாய் ' வரை நாம் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் வினாக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைகளை விட்டு விரட்டியடித்து விடுகின்றனவாம்.
காயங்கள் எதுவும் இல்லாமல் குழந்தைப் பருவத்தைக் கடந்து போகும் குழந்தைகளை விட விழுந்து எழுந்து ஓடிப் பழகும் குழந்தைகள் தான் வெற்றியாளர்கள் ஆகிறார்கள் என்பதை அறியாமல் இல்லை.
ஆனாலும் நாம் அப்படியே தான் இருக்கிறோம்.
கேள்விகள் என்பது அறிந்துகொள்ளும் ஆர்வம். கேள்விகள் தீரும்போது மந்தநிலை வந்துவிடுகிறது.
Comments
Post a Comment
Your feedback