ஆபீசிலிருந்து வீடு திரும்பிய கணவனுக்கு ஆசை ஆசையாக காபி டம்ளரைக் கையில் கொடுத்துவிட்டு தானும் குடிக்கத் தொடங்கினாள் மனைவி.
காப்பி டேஸ்ட்டாக இல்லை எனத் தோன்றியது அவளுக்கு.
அவனிடம் கேட்டாள்,"காப்பி நல்லா இருக்கா?".
"ஆமாம்" என்றான் அவன்.
மறுபடியும் வற்புறுத்திக் கேட்டாள்.
"நீங்க பொய் சொல்றீங்க, நான் வருத்தப்படுவேன்னு".
"இல்லை, நல்லாதான் இருக்கு" என்றான் அவன்.
"சரி நம்பறேன். இன்னும் என்ன செய்திருந்தால் காபி இன்னும் டேஸ்டா இருந்திருக்கும்"
அவன் சொன்னான்.
"கொஞ்சம் தண்ணீரைக் குறைத்திருந்து கொஞ்சம் கூடுதலாகக் காப்பித்தூள் போட்டு, கூடக் கொஞ்சம் சர்க்கரையும் போட்டு இன்னும் கொஞ்சம் சூடாகவும் இருந்திருந்தால் இன்னும் டேஸ்டாக இருந்திருக்கும்".
சாப்பிடும் முன் அல்லது காபி, டீ போன்றவற்றைக் குடிக்கும் முன் நாம் மனதில் ஒரு சுவையைக் கற்பனை செய்து வைத்திருப்போம். எவ்வளவுதான் தான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் நாம் நினைத்து வைத்திருக்கும் சுவை சில நேரங்களில் இல்லாமல் போய்விடும்.
அப்போது நமக்கு இரண்டு வழிகள் இருக்கும்.
ஒன்று, சுவை என்ன சுவை அதைக் கஷ்டப்பட்டுச் செய்தவர்களின் மனது தான் முக்கியம் என்று நினைக்கலாம்.
இரண்டாவது, யார் மனது எப்படி வருத்தப்பட்டால் எனக்கென்ன? எனக்குச் சுவை தான் முக்கியம் என்று நினைக்கலாம்.
சுவையாக இல்லாத போதும் அதில் எது நல்ல விஷயமோ அதைச் சொல்ல ஒரு நல்ல பண்பு வேண்டும்.
இப்படி நல்ல கெட்ட விஷயங்களைப் பக்குவமாக சொல்வதை curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
கோழி முட்டை, குருவி முட்டை தெரியும்.
அது என்ன curate's egg ?
curate's egg என்ற இந்தப் பயன்பாடு ஒரு கார்ட்டூன் படத்திலிருந்து வந்தது.
இந்த கார்ட்டூனில் ஒரு பிஷப்பும் ஒரு பாதிரியாரும் இருப்பார்கள்.
அந்த பிஷப் பாதிரியாருக்கு ஒரு முட்டையை தட்டில் வைத்து கொடுப்பார். கொடுத்த பின்பு அந்த முட்டை அழுகிய முட்டை போல இருப்பதாக பிஷப்புக்கு ஒரு சந்தேகம்.
அவர் உடனே அந்த பாதிரியாரிடம் கேட்பார் "முட்டை கெட்டுப் போனது போல தோன்றுகிறதே" என்று.
அது அழுகிய முட்டை தான் என்று சொன்னால் பிஷப் வருத்தப்படுவார் என்று நினைத்த பாதிரியார் "முட்டைக்கு என்ன அழகாக இருக்கிறது. அதில் சில பகுதி சாப்பிட முடிவதாகவும் இருக்கிறது" என்று பதில் சொல்வார்.
அந்தப் பாதிரியார் சாப்பிட்டு முடித்த பாதி அழுகிய முட்டையைத் தான் Curate's egg என்பார்கள்.
Curate என்றால் பாதிரியார்.
இந்தக் கார்ட்டூன் படம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பஞ்ச் பத்திரிக்கையில் (Punch) வந்தது. ஜார்ஜ் முரியர் என்பவரால் வரையப்பட்ட கார்ட்டூன் படம் அது.
Punch magazine கார்ட்டூன்கள் உலகப் புகழ் பெற்றவை.
உப்பு கொஞ்சம் குறைந்தால் கூட தட்டைத் தள்ளிவிட்டுக் கை கழுவிக்கொண்டு போகும் சிடுமுஞ்சியாக நாம் இருந்தால் இந்த அழுகிய முட்டைக்குப் பின் உள்ள அன்பும் பக்குவமும் புரிவதற்கு வாய்ப்பில்லை தானே?
Comments
Post a Comment
Your feedback