நூறு ரூபாய் டியுப் லைட் ஒன்றை வாங்கி அதில் ஐம்பது ரூபாய் செலவில் உபயம் என தன் பெயரை எழுதி பயபக்தியோடு கோவிலுக்கு தானம் வழங்கிவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லோரும் அதைப் பார்த்து, தன்னை 'கொடை வள்ளல்' என எண்ணுவதாக நினைத்துக்கொள்கிறோம்.
இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு விளம்பரப்படுத்தாமல் நல்லது செய்பவர்கள் கூட இருக்கிறார்கள்.
அப்படி நினைத்து நல்லது செய்வதும் கூட அறம் ஆகாது என்று வாழ்ந்த மனிதர்கள் இருந்த காலம் ஒன்று இருந்தது.
எதிர்பார்ப்பும், எந்தப் புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணமும் மனதில் இல்லாமல் நல்ல செயல் செய்ய முடிந்தால் அது தான் அறம்.
நேர்மையாக வியாபாரம் செய்யும் போது கூட , இப்படிச் செய்தால் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்காமல் வணிகர்கள் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது.
‘அறவிலை வணிகன்’ அல்லன் என்பதில் பெருமை கொண்ட காலம் அது.
அறக்கொடை என்பது சான்றோர்கள் சென்று காட்டிய ஒரு வழி என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய் மன்னன் என்று ஒரு பாடல் கூறுகிறது.
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடிய பாடல் (புறநானூறு)
Comments
Post a Comment
Your feedback