சீதை அசோகவனத்தில் சிறைப் பட்டுக் கிடக்கிறாள்.
அவள் நினைவாகவே உள்ள ராமன் துக்கப்பட்டு நிற்கிறான்.
சீதையைத் தேட வாக்குத்தந்த
சுக்கிரீவனோ மது மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறான். போதைப் பழக்கம் உள்ளவர்களிடம் அவ்வளவு தான் பொறுப்புணர்ச்சி இருக்கும் போல.
மதுக் கொண்டாட்டத்தில் ஆழ்ந்து கிடக்கும் சுக்கிரீவனுக்குப் புத்தி புகட்டப் புறப்படுகிறான் லட்சுமணன்.
நெஞ்சில் கனல் எரிய, கோபம் கொப்பளிக்க, வில்லை எடுத்துக்கொண்டு புயலாகப் புறப்பட்டு சுக்ரீவன் அரண்மனையை அடைகிறான்.
அடக்க முடியாத ஆத்திரத்தில் அவன் கோட்டைக்கதவை காலால் உதைத்து உடைத்துவிட்டு சீறிக்கொண்டு உள்ளே நுழைகிறான். கண்கள் சுக்ரீவனைத் தேடி அவனுக்கு முன்பாக விரைகின்றன.
அப்போது திடீரென்று சுக்ரீவன் மனைவி தாரை தன் தோழிகளோடு எதிரே வருகிறாள்.
கொலை வெறியோடு வந்த லட்சுமணன் பெண்களை எதிரே பார்த்தவுடன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறான்.
ருத்ரதாண்டவமாடும் அவன் கால்கள் நிற்பதற்கே தடுமாற, தன் வில்லை நிலத்தில் ஊன்றி அதன் ஆதரவில் நிற்கிறான்.
லட்சுமணன் நிற்கும் அந்தக் கோலத்துக்கு கம்பன் சொல்லும் ஓர் அழகான உதாரணம் இது.
அப்போது தான் திருமணம் முடிந்த புது மாப்பிள்ளை தன் மனைவியைத் தனியே சந்திக்க ஆவலாக அவள் அறைக்குள் போகும்போது அங்கே அவன் மாமியார், சின்ன மாமியார் கூட இன்னும் சில பெண்கள் எல்லாம் இருந்தால் அவன் எப்படி அங்கேயும் நிற்க முடியாமல் திரும்பிப்போகவும் முடியாமல் நிற்பானோ அப்படி நின்றான் லட்சுமணன்.
உண்மையில் கம்பன் காட்டியது லட்சுமணனின் நிலை மட்டும் அல்ல; அது ஒரு அழகான உளவியல்.
பிரச்னைகளை எப்போதும் போராடித் தான் தீர்வு காண வேண்டும் என்பதில்லை. பிரச்னைகளை அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் முன்பே ஒன்றுமில்லாமல் செய்துவிடுதல் ஒரு வகையான திறமை. அந்தத் திறமை ஆண்களை விட பெண்களுக்கு இயல்பாகவே அதிகம் போல. அதனால் தான், எல்லா முக்கியமான அலுவலகங்களிலும் வரவேற்பு, மக்கள் தொடர்புப் பணிகளில் ஆண்களை விட அதிகம் பெண்களே இருக்கிறார்கள்.
ஒரு சரியான புன்னகையின் முன் கோபம் தடுமாறிப் போகிறது. வெட்கத்தில் தலை சாய்க்கும் பெண்ணின் முன் வீரம் நிற்கமுடிவதில்லை.
தாமரை வதனம் சாய்த்து,
தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
நடுங்குவாள், இனைய சொன்னாள்.
சொல்லும் பொருளும் :
தாமரை வதனம் சாய்த்து - தாமரை போன்ற முகத்தைச் சாய்த்து
தனு - வில்
வந்தான் ஆம் என -வந்ததைப் போல
மைந்தன் நிற்ப - அந்தப் பையன் (இலக்குவன்) நிற்க
பூமியில் - பூமியின் மேல்
அணங்கு அனார் தம் - தேவதை போன்ற பெண்களின்
பொது இடைப் புகுந்து - நடுவில் இருந்து
பொன்தோள் - பொன் போன்ற தோள்களைக் கொண்ட
தூமன - தூய மனத்தைக் கொண்ட
நெடுங்கண் - நீண்ட கண்களைக் கொண்ட
நடுங்குவாள் - நடுங்கிக் கொண்டு
இனைய சொன்னாள் - இவ்வாறு சொன்னாள்.
Comments
Post a Comment
Your feedback