குழந்தையாக இருக்கும்போது ஒரு கரிக்குருவிப் பாடல் படித்திருப்போம்.
ஒரு கரிக்குருவி எருமையின் மேலே ஏறி உட்கார்ந்தது பார்.
ஓஹோ எருமை உனை விட நானே உயரம் என்றது பார்.
திரும்புமுன் குருவியைச் சிறுவன் ஒருவன் சென்று பிடித்தான் பார்.
சிக்கிய குருவி படபடவென்றே சிறகை அடித்தது பார்.
அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் அபாயம் ஒன்றுமில்லை.
அடுத்தவன் முதுகில் ஏற நினைத்தால் அதனால் வரும் தொல்லை.
எவரெவர் எனினும் இதை உணர்வாரேல் என்றைக்கும் நட்டமில்லை.
எருமை மேல் இருந்த அந்தக் குருவி தான் கரிக்குருவி.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
என்ற குறளுக்கு இந்தக் குருவி சரியான எடுத்துக்காட்டு.
திருவிளையாடற் புராணம் என்ற நூல் பரஞ்சோதி முனிவர் எழுதியது.
இதில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதிலொன்று கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
முற்பிறப்பில் பல புண்ணியங்கள் செய்தபோதும் ஒருவன் சில பாவங்களையும் செய்து விடுகிறான். அதனால் அடுத்த பிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான்.
அந்தக் குருவியை காகங்கள் மிகவும் தொந்தரவு செய்தன. காகங்களுக்குப் பயந்து நெடுந்தொலைவுக்குப் பறந்து சென்ற அக்கருவி தன் நிலையை எண்ணி வருந்தியபடி ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தது. அப்போது சிலர் பேசிக் கொண்டு செல்வது கரிக்குருவியின் காதில் விழுந்தது.
அவர்கள் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரக் கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று பேசிக் கொண்டு சென்றனர். அதைக்கேட்ட குருவி பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கியது.
இறைவனும் குருவியின் பக்தியில் மகிழ்ந்து ஒரு மந்திரத்தை உபதேசித்தார்.
இந்தத் திருவிளையாடல் புராணக் காட்சி ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மூலத் திருநாளில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்திக் காட்டப்படுகிறது.
இந்தப் புராணக் கதையில் வருவது போல சிவபெருமான் உபதேசித்தது உண்மையா என்ற ஆராய்ச்சிக்குள் போகாமல் நாம் கரிக்குருவியைப் பின்தொடர்ந்து போவோம்.
இந்தக் கரிக்குருவி இரண்டு அதிசயமான விசயங்களைக் கொண்டுள்ளது என்று பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஒன்று அதனுடைய தைரியம்.
இரண்டாவது 'கிசு கிசு' என்று அவை தமக்குள் பேசிக் கொள்வது.
கரிக்குருவிக்கு ஒன்றும் பெரிய பலம் எல்லாம் இல்லை. ஆனால் அசாத்தியமான தைரியம் கொண்டது அது. கரிக்குருவி கூடு கட்டியிருக்கும் இடத்துக்கு அருகில் தன்னைவிட வலிமையான பறவைகள் வந்தால் கூட அண்ட விடாமல் விரட்டி அடித்து விடும். காக்கை பருந்து போன்றவை கரிக்குருவியை விட பலம் வாய்ந்தவை. ஆனால் கரிக்குருவிக் கூட்டுக்கு அருகே காக்கையும் கழுகும் பறந்து போனால் இது வலியச் சென்று அவற்றோடு சண்டையிடும். சண்டையிடுவது மட்டுமல்லாமல் அவற்றை விரட்டி அடித்து விடும்.
கழுகும் காக்கையும் பிற பறவைகளை கொன்று தின்னும் அளவுக்கு வலிமையானவை. அந்தப் பறவைகளுக்கு கரிக்குருவியுங்கூட உணவுதான். இதெல்லாம் தெரிந்தும் அவற்றோடு வலியப் போய் சண்டை போட்டு விரட்டிவிடும் துணிச்சலுக்குக் காரணம் அதன் உடல் வலிமை அல்ல, அசாத்தியமான தைரியம் தான் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கரிக்குருவியின் இந்தத் துணிச்சலால் மற்ற பறவைகள் கரிக்குருவிக் கூடருகே தங்குவதையும் கூடு கட்டிக் கொள்வதையும் விரும்புகின்றன.
கரிக்குருவி இருக்குமிடம் பாதுகாப்புள்ள இடமாக மற்ற பறவைகளால் கருதப்படுகிறது.
நாம் திருப்பாவையில் ஆண்டாள் பாசுரம் படித்திருப்போம்.
அதில், கரிக்குருவிகள் பேசிக்கொள்வது கூறப்படும்.
கீசுகீசென் றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
என்ற பாடலில் அதிகாலையில் தோழிகளுடன் கண்ணனை வழிபடச் செல்லும் ஒரு பெண் தூங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்ப கரிக்குருவிச் சப்தம் கேட்கவில்லையா? இன்னுமா தூக்கம்? என்று கூறுவாள் .
பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி விடியற்காலை கரிக்குருவி கத்துவது தமக்குள் பேசிக்கொள்வது போலவே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருப்பாவை உரை ஆனைச்சாத்தன் என்ற பறவையை வலியன் என்று குறிப்பிடுகிறது.
வலியன் என்பது நாட்டார் வழக்கில் கரிச்சான் குருவி என்று குறிப்பிடப்படும் கரிக்குருவியைக் குறிக்கும்.
மதுரைக் காஞ்சியிலும் குறுந்தொகையிலும் யானையங்குருகு என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது.
குறுந்தொகைப் பாடலுக்கு உ.வே.சாமிநாதையர் ஒப்புமை கூறும்போது ஆனைச்சாத்தன் என்ற பறவை (திருப்பாவை) இது போலும் என்று குறிப்பிடுகிறார்.
உயிரோட்டம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நாம் கரிக்குருவியை எங்கே கவனிக்கப்போகிறோம்.
அப்படியே கவனித்தாலும் அது கரிக்குருவி தான் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது?
Comments
Post a Comment
Your feedback