ஒவ்வொரு கோவிலின் அமைவிடம் குறித்து ஒரு வரலாறு அல்லது ஒரு கதை வழிவழியாகக் கூறப்பட்டு வரும். அந்த இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை சில குறிப்புகள் வழியாக கடவுள் காட்டியதாக முன்னோர்கள் கருதினர்.
அந்த நம்பிக்கையே அந்தத் தலவரலாறுகளுக்கு அடிப்படை. . அந்தக் குறிகள் பொதுவாக இயற்கையை மீறிய நிகழ்ச்சிகளாக இருக்கும்.
வேட்டை நாயை முயல் விரட்டிய இடம், யானையைக் கோழி விரட்டிய இடம் என்பது போன்ற கதைகளைப் படிக்கும்போது அவை வெறும் கற்பனை எனக் கருதுவோரும் உண்டு.
ஆனால் எளிய விலங்குகள் தன்னை விட பல மடங்கு வலிமையான விலங்குகளை தாக்கி விரட்டிய நிகழ்வுகளை அறிவியலாளர்கள் எழுதியுள்ளனர்.
பாஞ்சாலங்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண் என்று கூறுவார்கள். பாஞ்சாலங்குறிச்சி என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே கட்டபொம்மனின் வீரம் நம் மனதுக்குள் வந்து விடும். வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்து, கட்டபொம்மனின் வீரத்தைப் பட்டி தொட்டி எங்கும் பரப்பியது ஒரு காரணம்.
கட்டபொம்மன் கட்டிய கோட்டைக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.
ஒரு வேட்டை நாய் முயலை விரட்டிக் கொண்டு சென்றது. ஓட்டமெடுத்த அந்த முயல் காளையார்கோவிலில் கட்டபொம்மன் கட்டியுள்ள கோட்டை இருக்கும் இடத்தை அடைந்ததும் விரட்டி வந்த வேட்டை நாயை திருப்பித் தாக்கியது.
முயலுக்கு தைரியத்தைத் தந்த மண் என்பதால் அந்த இடத்திலே மண்ணிலே கோட்டை கட்டப்பட்டது என்று கோட்டை வரலாற்றை கூறுகிறார்கள்.
மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்தை வாங்கிக் கொண்டுபோய் புதுச்சேரியில் இருந்த ஒரு ஜமீன்தாரிடம் படித்துக் காட்டினார் குவளைக்கண்ணன்.
ஜமீன்தாரும் அவரின் காரியதரிசியும் பாடலை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். முடிவில் இந்தப் பாடல்களை எழுதியவர் யார் என்று காரியதரிசி குவளைக்கண்ணனைக் கேட்டார்.
"இது பாரதியார் என்பவர் பாடியது" என்றார் குவளைக்கண்ணன்.
"பாரதியார் எந்த ஊரில் பிறந்தவர்" என்று அடுத்துக்கேட்டார்.
"எட்டையபுரம்" என்றார் கண்ணன்.
"இவ்வளவு அருமையான தேசபக்திப் பாடல்களை எழுதியவர் எட்டயபுரத்துக்காரராக இருக்க முடியாது" என்றார் காரியதரிசி.
"இல்லை, இல்லை இதை எழுதிய பாரதி எட்டையபுரத்தில் தான் பிறந்தார்" என்றார் குவளைக்கண்ணன்.
"நிச்சயமாக இருக்க முடியாது. நீ வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை கேள். பாஞ்சாலங்குறிச்சியிலே ஒரு நாய் பிறந்தால் அதற்கு முன்னே மற்ற நாய்கள் எதிர்த்து நிற்க முடியாது. பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு வித்வான் பிறந்தால் அவனுக்குப் பதில் பாட்டுப் பாட யாராலும் முடியாது. இந்த வீரம் செறிந்த பாடல்களைப் பாடியது பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும். நான் பேசியதை பாரதியாரிடம் சொல்லி நீ விவரம் அறிந்து வா" என்றார் காரியதரிசி.
குவளைக்கண்ணன் பாரதியாரிடம் நடந்ததைக் கூறினார்.
பாரதியாரின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
"கிருஷ்ணா, எனக்கு எட்டையபுரம் தான். பாஞ்சாலங்குறிச்சி என்பது எட்டையபுரம் ஓரத்தில் இருக்கின்ற ஊர்தான் என்று அவரிடம் சொல்" என்றார் பாரதியார் சிரித்துக்கொண்டே.
இந்த வீர வரலாறு பாஞ்சாலங்குறிச்சிக்கு மட்டும் அல்ல.
உறையூர் தோன்றிய வரலாற்றை தமிழ் இலக்கியங்களில் நாம் படிக்க முடிகிறது.
முறம் செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம்
என்று சிலப்பதிகாரம் உறையூரைப் பற்றிக் கூறுகிறது.
யானையை கோழி எதிர்த்து வெற்றி பெற்ற ஓரிடத்தை அந்த மண்ணின் பெருமை கருதி உருவாக்கியதே உறையூர் என்று வரலாறு கூறுகிறது. உறையூருக்கு மற்றொரு பெயர் கோழி என்பதாகும்.
பண்டைய சோழ மன்னன் ஒருவன் யானையில் சென்று கொண்டிருந்த போது ஓரிடத்தில் நின்று கொண்டிருந்த கோழியைக் கடக்க முயற்சிக்கும் போது கோபம் கொண்ட கோழி யானையை தாக்கி அதனை மிரண்டு ஓடும்படிச் செய்தது. அந்த இடத்தின் சிறப்பைக் கருதியே கோழி என அந்த இடத்திற்கு பெயர் சூட்டியதாகக் கூறுவர்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நாம் பார்த்திருந்தோம். புலிக்கு உணவாக உயிருடன் ஒரு நாய் விடப்பட்டது. நாயைப் பார்த்தவுடன் அதை நோக்கி ஓடி வந்த புலியை குரைத்துக் குரைத்தே விரட்டியடித்தது அந்த நாய்.
அதீத பயத்தில் அல்லது இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் எல்லா உயிர்களுக்கும் எங்கிருந்தோ ஒரு அசாத்திய துணிச்சல் வருவதை இதன் மூலம் அறியலாம்.
Comments
Post a Comment
Your feedback