யாரெல்லாம் ஆடு, மாடு வளர்க்கலாம். தனக்கென தோட்டம் இருப்பவர்கள் பசு மாடுகள் எருமைகள் இவற்றையெல்லாம் வளர்ப்பார்கள். விளைச்சல் நன்றாக இருக்கின்ற காலத்தில் கிடைக்கின்ற தீவனங்களை எல்லாம் பத்திரப்படுத்தி மேய்ச்சலுக்கு ஒன்றும் இல்லாத நாட்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படியாக தோட்டம், காடு இருப்பவர்கள் தங்கள் கால்நடைகளை பட்டினியில் இருந்து காப்பாற்றி பக்குவமாய் வளர்த்து விட முடியும்.
தோட்டம் எதுவும் இல்லாதவர்கள் பெரும்பாலும் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுப் பாதைகளிலும் இட்டேரி, இடைக்குறை நிலங்களிலும் உள்ள புல் புதர்களில் மேய விட்டு ஆடுகளை வளர்ப்பார்கள்.
அப்படி ஆடு வளர்க்கும் அவர்களும் பிழைக்க அப்போதெல்லாம் முட்புதர்கள் கொண்ட வாழ்வேலி எல்லா நிலத்திலும் இருக்கும். விளைச்சலுக்கு கெடுதல் தரும் பூச்சி புழுக்களைத் தின்று வாழும் குருவிகள், பறவைகள், பாம்பு, பல்லி, இவையெல்லாம் அங்கு தங்கி வாழ போக்கிடமாக இருக்கும். அந்த வேலிகள் தான் தனக்கென நிலமில்லாதவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் வயிறு நிரப்பும்.
எந்தத் தோட்டத்தில் வேலைக்குச் செல்வார்களோ அந்தத் தோட்டத்தில் உள்ள வேலிகள், மரம், கொடிகளில் இலை, தழைகளை உரிமையோடு கொண்டு செல்வார்கள். அதை அந்த நிலத்துக்காரர்களும் அனுமதித்தார்கள்.
அதே நேரம் வேலிகள், மரங்களைச் சேதப்படுத்தாமல் இருக்க அரிவாள், கொடுவாள் போன்றவற்றைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றாக ஒரு நீண்ட மூங்கில் குச்சியின் ஒரு முனையில் கொக்கி போன்ற அமைப்பை உருவாக்கிப் பயன்படுத்துவர். அதை சல்லைக் கொக்கி என்பார்கள். சுருக்கமாக சல்லை என்று சொல்வார்கள்.
தரையில் நின்று சல்லை எட்டும் வரை உள்ளவற்றையெல்லாம் பறித்துக் கொள்வார்கள். அது லக்ஷ்மணன் ரேகை போல ஒரு கட்டுப்பாட்டோடு கையாளப்பட்டது.
நாளடைவில் தரையில் இருந்து பறித்த பின், அது போதவில்லை என்றால் மரத்தின் மீது ஏறி நின்று கொக்கியைப் பயன்படுத்தினர்.
தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட வறட்சிக் காலங்களில் தங்கள் கால்நடைகளுக்கு தீனி இல்லாமல் தவிப்பார்கள். ஆனால் கையில் சல்லைக் கொக்கியை எடுத்துக்கொண்டு புறப்படுபவர்கள் எப்போதும் வெறுங்கையோடு திரும்புவதில்லை. ஏனென்றால் வெறுங்கையோடு திரும்பினால் வீட்டில் இருக்கும் அந்த வாயில்லா ஜீவன் பட்டினியாய் அல்லவா கிடக்கும்.
அதனால், சல்லைக் கொக்கியைக் கையில் எடுத்தவுடன் பார்ப்பதெல்லாம் பறிப்பதற்காகவே என்பது போலவே தோன்றும்.
வருவது வரட்டும் என்பது போல தழை பிடுங்குவதிலேயே அவர்கள் கவனமெல்லாம் இருக்கும். ஆங்கிலத்தில் இந்த மனோபாவத்தை சல்லைக் கொக்கி மனோபாவம் என்ற பொருளில் By hook or by crook என்று சொல்வார்கள். Hook என்றால் கொக்கி. crook என்றால் கொக்கியோடு கூடிய நீண்ட குச்சி.
எப்படியாவது தன் வேலையைச் செய்துமுடித்து விடுபவர்களை hook or by crook அடைமொழியோடு சொல்வார்கள்.
If you give a task to him, he will get it done by hook or by crook.
அவனிடம் அந்த வேலையை கொடுத்தால் என்ன செய்தாவது முடித்து விடுவான் என்பதெல்லாம் அந்த சல்லைக் கொக்கிக்குப் பின் உள்ள சரித்திரம்.
ஆவுக்கு (பசு மாட்டுக்கு) தண்ணீர் வேண்டும் என்றால் கூட பிச்சை எடுக்கக்கூடாது என்று தமிழ் இலக்கியம் சொல்லும். ஆனால் ஆட்டுக்குத் தழை இல்லை என்றால் பிச்சை எல்லாம் எடுக்கமாட்டார்கள். பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சல்லைக் கொக்கியில் தான்.
Comments
Post a Comment
Your feedback