“எங்களுக்குப் பேச்சைப் பற்றிக் கூறு” என்று ஒரு அறிஞன் கேட்டான்.
அவன் பதில் சொல்லத் தொடங்கினான்.
உங்கள் எண்ணங்களோடு நீங்கள் அமைதியாக இருக்க முடியாத போது தான் நீங்கள் பேசுகிறீர்கள்.
உங்கள் இதயத்தோடு தனிமையாக உங்களால் இருக்க முடியாத போது, நீங்கள் வார்த்தைகளில் வசிக்க ஆரம்பிக்கிறீர்கள்.
வார்த்தைச் சத்தத்தால் இதயத்திலிருந்து உங்களை இடம் மாற்றுகிறீர்கள்.
அதிகமாகப் பேசிப்பேசி உங்கள் எண்ணங்களை குத்திக் கிழித்துவிடுகிறீர்கள்.
சிந்தனை..... அது வானம்பாடி
உங்கள் வார்த்தைக் கூண்டுகளில் அது சிறகை விரித்தாலும் பறக்க முடிவதில்லை.
உங்களது தனிமையோடு இருக்கப் பயந்து கொண்டே நீங்கள் பேசுபவர்களைத் தேடிப் போகிறீர்கள்.
மௌனத்தில் உங்களின் உள்மனம் உங்களை உரித்துப் பார்க்கிறது. அதனாலேயே தப்பித்து ஓடுகிறீர்கள்.
தமக்கே புரியாத உண்மைகளை பலர் வார்த்தைகளில் வடித்தெடுக்கிறார்கள்.
உண்மைகளைப் புரிந்துகொண்ட சிலரோ அவற்றை வார்த்தைகளால் வரவழைப்பதில்லை.
இந்தச் சிலரின் இதயங்களில் தான் ஆன்மா வீற்றிருக்கிறது.
பாதையில் பார்க்கும் நண்பனோடு பேச உங்களின் ஆன்மா
உதடுகளை அசைத்து வார்த்தைகளுக்கு வழியமைக்கட்டும்.
உங்களின் குரலின் குரல் அவனது செவியின் காதுகளில் பேசட்டும்.
கோப்பைகளின் வண்ணம் மறந்து போகலாம்; கோப்பைகளே கூட காணாமல் போகலாம். நாக்கு கோப்பையை அல்ல; பழச்சுவையைத் தான் நினைவில் வைத்திருக்கும்.
ஆன்மாவும் அப்படித்தான் உங்கள் உள்ளத்து உண்மையின் ஓசையைத்தான் நினைவில் வைத்திருக்கும்.
Comments
Post a Comment
Your feedback