அழகாக இருக்கிறது என்று தான் அந்த மான் வேண்டும் என்று கேட்டேன்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய தவறு தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணமா?
எனக்குத் தான் தெரியவில்லை அது மாய மான் என்று. ராமனுக்கு அது எப்படித் தெரியாமல் போய்விட்டது.
ஆக அது ராமன் செய்த தவறு தானே!
அப்படியே வைத்துக்கொண்டாலும் ஐயோ என்ற குரல் ராமனுடைய குரல் அல்ல அது போலிக் குரல் என்று லக்ஷ்மணன் சொன்ன போதும் கேட்கவில்லையே நான்.
எனக்கு சொல் புத்தியும் இல்லை; சுய அறிவும் இல்லை என்று எல்லோரும் என்னையே குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது எனக்கு.
இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே தனிமைச் சிறையில் இருக்கிறாள் சீதை.
தன் ஆதங்கம் எல்லாம் சேர கோபம் கோபமாக வருகிறது. யாரையாவது திட்ட வேண்டும் போல இருக்கிறது.
ஆனால் யாரும் இல்லாத தனிமை.
இப்படியே நேரம் போக,இரவு வந்துவிட்டது. வானத்தில் நிலா வருகிறது.
நிலாவைப் பார்த்தவுடன் அதுவும் தன்னைக் குற்றம் சொல்வது போலவே தோன்றுகிறது சீதைக்கு. உடனே கோபம் வருகிறது.
"ஏய், அறிவு இல்லாத நிலவே, நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நகராமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு சொந்த அறிவில்லை என்று எப்படி நினைக்கலாம் நீ?
உனக்கு மட்டும் சொந்த ஒளியிருக்கிறதா என்ன? கதிரவனின் ஒளியில் தானே உன் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
உனக்கு மட்டுமா என்ன? உன் கூடவே வருகிறதே இரவு அதற்காவது அறிவு வேண்டாம்?
என்னையே எல்லோரும் குற்றம் சொல்கிறீர்கள்.அங்கே தனியாக இருக்கிறானே அந்த இராமன், அவனிடம் யாரும் ஏன் எதுவும் கேட்பதில்லை?"
ஒரு பாவமும் அறியாமல் அது பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது நிலவு. அதன் மேல் தான் இத்தனை கோபம் சீதைக்கு.
‘கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !
செல்லா இரவே !சிறுகா இருளே !
எல்லாம் எனையேமுனிவீர்; நினையா
வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ?
(கம்ப இராமாயணம்)
கல்லா மதியே -அறிவு இல்லாத நிலவே
கதிர் வாள் நிலவே - கதிரவனின் ஒளியில் வாழும் நிலவே
செல்லா இரவே -செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே
சிறுகா இருளே -குறையாத இருளே
எல்லாம் எனையேமுனிவீர் - எல்லாரும் என்னையே சொல்கிறீர்கள்
நினையா -என்னை நினைக்காத
வில்லாளனை -இராமனை
யாதும் விளித்திலிரோ ? - யாரும் கேட்க மாட்டீர்களா?
Comments
Post a Comment
Your feedback