வந்தது என்னவோ மதத்தைப் பரப்பத் தான்.
கிறித்துவ மிஷனரிகளால் இத்தாலியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அவர் 1710ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
Constantine Joseph Beschi என்பது அவர் பெயர்.
மதுரை வந்த அவர் காமநாய்க்கன்பட்டி வந்து தங்கினார். மதத்தைப் பரப்ப வேண்டும் என்றால் அந்த மக்களோடு பேச பழக தமிழ் தெரிந்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார் . அதன் விளைவாய் இலக்கண இலக்கியம் கற்று இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
மதுரைத் தமிழ் ஆசிரியரின் பெரும் திறமையும் தமிழ்ப் பாடங்களில் அவர் காட்டிய ஈடுபாடும் வியக்கத்தக்க அளவிலான தமிழ்ப் புலமைக்கு வித்திட்டன. இருபதுக்கும் மேலான தமிழ் நூல்களை அவர் எழுதினார்.
தேம்பாவணி என்ற காப்பியம் அவர் இயற்றியது தான். தமிழைத் தாய்மொழியாக கொண்டிருக்காத ஒரு வெளிநாட்டவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் என்ற பெருமை கொண்டது தேம்பாவணி.
தமிழோடு தன்னை மெல்லமெல்லப் பிணைத்துக்கொண்டார். தன் பெயர் தமிழில் இருக்க வேண்டும் என விரும்பினார். முதலில் தைரியநாதன் என்றும் அதன் பின் வீரமாமுனிவர் என்றும் பெயரை மாற்றிக்கொண்டார்.
தான் படித்து மகிழ்ந்த திருக்குறள், , தேவாரம் , திருப்புகழ் , நன்னூல் எனத் தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.
தமிழ்- லத்தீன் மற்றும் தமிழ்- போர்ச்சிக்கீசிய அகராதிகளை உருவாக்கினார்.
தமிழ் அகராதிகள் எல்லாம் அப்போது நிகண்டுகளாக அதாவது பாடல் வடிவில் இருந்தன. எல்லோரும் பயன்படுத்த முடியுமாறு உரைநடை வடிவில் முதல் அகராதியை உருவாக்கினார். அது தான் சதுரகராதி.
தான் கற்றுணர்ந்த பின் தமிழ் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தொகுத்து தொன்னூல் விளக்கம் என்ற நூலை வெளியிட்டார்.
ஆங்கிலத்தில் Written English, Spoken
English இரண்டுக்கும் தனித்தனி வழிகாட்டி விதிகள் கொண்ட புத்தகங்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். தமிழுக்கும் எழுத்துத் தமிழ் வேறு, பேச்சுத் தமிழ் வேறு. பேச்சுத் தமிழுக்கு என்று ஒரு நூல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார். அப்படி ஒரு நூலையும் அவர் எழுதினார். அது தான் கொடுந்தமிழ் இலக்கணம்.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். (அறத்துப்பால் மற்றும் பொருட்பால் இரண்டை மட்டும்)
வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களை உரைநடையில் படைத்தவர்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை போன்ற நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்தவை.
இவர் தமிழில் எழுதிய பரமார்த்த குருவின் கதை தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை நூல் என்ற பெருமையுடையது.
தமிழ்ப் புலவர்கள் கூட இத்தனை வகை இலக்கியங்களில் நூல்கள் படைக்கவில்லையே என்று வியக்க வைக்கும் வகையில் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை, செய்யுள் என ஒன்றையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றிலும் நூல்கள் படைத்தார்.
எங்கோ ஒரு சீமையில் பிறந்து (8.11.1680), எதற்காகவோ இங்கு வந்து, தமிழில் தன்னைப் பறிகொடுத்து, மீண்டும் தன் நாடான இத்தாலிக்குப் போகாமல் இந்திய மண்ணிலேயே தன் இறுதிவரை வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற அவர் தன் 67 ஆவது வயதில் அங்கேயே உயிர் நீத்தார்.. அந்த நாள் பிப்ரவரி 4, 1747.
Comments
Post a Comment
Your feedback