Skip to main content

Posts

Showing posts from July, 2022

என்றும் பிறழ்வில்லை...

  பசும்பாலைக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது; மாறாகச் சுவை கூடும்.  தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுட்டாலும் ஒளியோ நிறமோ கெடாது. தேய்த்தாலும் சந்தனக் கட்டை மணம் மாறாது. கருமை நிறம் கொண்ட அகில் கட்டையை நெருப்பில் போட்டாலும் அதில் நறுமணம் வீசும். கருகல் மணம் வீசாது.   தன்னிலை தடுமாறாத நிலை தான் மேன்மை.  அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.  சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.  அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது.   புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.   (வெற்றிவேற்கை)

நீ வருவாய் என....

நீ வருவாய் என....   பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருக்கின்றன.  நடந்து நடந்து என் கால்கள்  ஓய்ந்து விட்டன. எதிரில் வருபவர்களை எல்லாம் நீயாக இருக்குமோ என்று  பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்து விட்டன.  நிச்சயமாக, வானில்  உள்ள  விண்மீன்களைக் காட்டிலும் இந்த உலகத்தில்,   அதிகம் பேர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற, அவளை மட்டும்  காணவில்லை. காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.  (குறுந்தொகை) சொற்பொருள் :  பரி - நடை நோக்குதல் - பார்த்தல் வாள் - ஒளி  அகல் -அகன்ற இரு  விசும்பு - பெரிய ஆகாயம் மீன் -விண்மீன் (நட்சத்திரம்) மன்ற - நிச்சயமாக.

நல்லதாக நாலு வார்த்தை -4

  Fake it till you make it! பல தீவிரமான முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்கப்படக்கூடியவை. கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளை சற்றே தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும். சரியான மனநிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். அந்த மனநிலையில் இருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலனைத் தரும்.  சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான். Fake it till you make it! மனசு போல வாழ்க்கை நூலிலிருந்து...

எல்லாம் ஒன்று தான்

மலைகளுக்கும் மேலே தோன்றும் நிலவு போல் ஊருக்குள்ளேயே அவர் தான் பெரிய மனிதன். யானை மேல் அலங்கரிக்கும் வெண்கொற்றக்குடை போல அவரின் செல்வமும் புகழும் எங்கும் அதிகாரம் செலுத்தும். அப்படி இருந்தவர் இறந்துவிட்டார் என்றால் அவர் மட்டும் இந்த உலகத்தில் நிலை பெற்று வாழ்வார் என்றா நாம் நினைக்கிறோம்? இறந்த பின் பாகுபாடும்  இல்லை. இறப்பை விலக்கி வைக்கும் செல்வந்தர்களும் இல்லை. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில்.      (நாலடியார்)

ஙப் போல் வளை

 ஙப் போல் வளை ங அப்படியா வளைகிறது? ஙகர வருக்கம் ஓர் அதிசயம். ங் என்ற மெய்யொலி ஒன்றே 12 உயிர்களுடன் சேர்ந்து உயிர்மெய் வடிவம் பெறுகிறது.  அது தன்னை ஒட்டிய பன்னிரண்டு உயிர்மெய்களையும் தமிழ் நெடுங்கணக்கில் வாழவைக்கிறது. மங்கை தங்கை பழங்காலம் ....இப்படி. அது போல் நீயும் உன் வருக்கத்தோடு இணக்கமாக வாழ்.  இந்த உலகிற்குப் பயன்பட்டு, உன் வருக்கத்தை உலகம் போற்றுமாறு செய் என்பதே ங தரும் செய்தி. வளை என்றால் காப்பாற்று என்று பொருள். -தமிழண்ணல்

அறக்கொடை

நூறு ரூபாய் டியுப் லைட் ஒன்றை வாங்கி அதில் ஐம்பது ரூபாய் செலவில் உபயம் என தன் பெயரை எழுதி பயபக்தியோடு கோவிலுக்கு தானம் வழங்கிவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எல்லோரும் அதைப் பார்த்து,  தன்னை 'கொடை வள்ளல்' என எண்ணுவதாக நினைத்துக்கொள்கிறோம். இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும்  என்று எண்ணிக்கொண்டு விளம்பரப்படுத்தாமல் நல்லது செய்பவர்கள் கூட இருக்கிறார்கள். அப்படி நினைத்து நல்லது செய்வதும் கூட அறம் ஆகாது என்று வாழ்ந்த மனிதர்கள் இருந்த காலம் ஒன்று இருந்தது. எதிர்பார்ப்பும், எந்தப் புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணமும்  மனதில் இல்லாமல் நல்ல செயல் செய்ய முடிந்தால் அது தான் அறம். நேர்மையாக வியாபாரம் செய்யும் போது கூட , இப்படிச் செய்தால் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்காமல் வணிகர்கள் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. ‘அறவிலை வணிகன்’  அல்லன்  என்பதில்  பெருமை கொண்ட காலம் அது. அறக்கொடை என்பது சான்றோர்கள் சென்று காட்டிய ஒரு வழி  என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய் மன்னன் என்று ஒரு பாடல் கூறுகிறது. 'இம்மைச் செய்தது மறுமைக்க...

நல்லதாக நாலு வார்த்தை-3

 யார் ரிமோட்? தொலைக்காட்சி ரிமோட்டை நீங்கள் இயக்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ரிமோட் தான் உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.  நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எங்கு உட்காரவேண்டும், எப்போது பேச வேண்டும், என்னென்ன பார்க்க வேண்டும் என்பதை தொலைக்காட்சி தான் முடிவு செய்கிறது.  இந்தப் போதையைக் கையாள மிதமிஞ்சிய சுய கட்டுப்பாடு தேவை.  ஒரு தட்டு நிறைய முந்திரிப் பருப்பை எதிரில் வைத்துக் கொண்டு இரண்டே இரண்டு மட்டும் சாப்பிட்டு விட்டு நிறுத்த முடியுமா? அதுபோலத்தான் அளவாக டிவி பார்ப்பது.  குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களாலும் அளவாக டிவி பார்ப்பது என்பது முடியாது. அதனால் டிவியை விட்டுப் போவதும் டிவியை போடாததும் தான் தீர்வுகள். "டிவியில் சில நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பேன்" என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா? எதிர்மறை எண்ணங்களை துறந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் கட்டுப்படுத்த முடியாத அந்த போதையைக் கைவிடுவதுதான் புத்திசாலித்தனம்.  டிவியை துறந்தால் எதிர்மறை எண்ணங்களின் ஒரு மிகப்பெரிய ஊற்றிலிருந்து தப்பிக்கிறீர்கள். உங்கள் உறவுகளுடன் நேரத்தை ...