உங்களுக்கு தலையில் வெள்ளைமுடி எதுவும் இல்லையே, எப்படி இது?
இந்தக் கேள்விக்கு அந்தப் பெரியவர் சொன்ன ரகசியம் இது தான்.
என்னுடைய மனைவி தங்கமான குணம் உடைய பெண்.
என்னுடைய குழந்தைகளும் கூட அப்படித்தான்.
எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்ணோ நான் ஏதும் சொல்லவேண்டியதே இல்லை. அவ்வளவு நல்ல பெண்.
என்னுடைய அரசனோ நல்லவன். அவன் முறையில்லாத, மக்களுக்கு கெடுதல் என்று தெரியும் எதையும் செய்யமாட்டான். தீயவை மக்களை அண்டாமல் பாதுகாக்கிறான்.
எங்கள் ஊரில் நிறையப் பேர் நல்லவர்கள் தான். மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் அணுகாமல் ஐம்புலன்களையும் அடக்கி ஆளுகிறார்கள். பெரியவர்களை மதித்துப் போற்றுகிறார்கள்.
அதனால் எனக்குக் கவலைகள் ஏதும் இல்லை. நரைமுடி இல்லாதவனாக இருக்கிறேன்!
வெள்ளைமுடி இல்லாமல் பராமரிக்கும் ரகசியத்தை இப்படி விலாவாரியாகச் சொன்னார் அந்தப் பெரியவர்.
யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.
(பிசிராந்தையார்- புறநானூறு )
சொல்லும் பொருளும் :
யாண்டு பலவாக- இத்தனை வயதாகியும்
நரையிலவாகுதல்- நரைமுடி இல்லாமல்
யாங்கு ஆகியரென- எப்படி பராமரிக்கிறீர்கள்
வினவுதி ராயின்- என்று கேட்டால்
மாண்ட என் மனைவியோடு - மாண்புடைய, அதாவது தங்கமான குணமுடைய என் மனைவியோடு
மக்களும் நிரம்பினர்- மக்களும் அப்படித்தான்
யான்கண் டனைய- எனக்கு அமைந்த
என்னிளையரும்- என் வேலைக்காரரும்
வேந்தனும்- அரசனும்
அல்லவை செய்யான்- முறைஇயலாததைச் செய்யமாட்டான்
காக்கும்-மக்களைக் காப்பான்
அதன்றலை(அதன் தலை)- அதற்கும் மேலாக
ஆன்றவிந் தடங்கிய- ஐம்புலன்களையும் அடக்கியாளும்
கொள்கைச்சான்றோர்-பண்புள்ள நல்லவர்கள்
பலர்யான் வாழு மூரே- பலர் என் ஊரில் இருக்கிறார்கள்
Comments
Post a Comment
Your feedback