சகலகலாவல்லி மாலை - பாடல் 6 ஓசை இன்பத்தை உணர , குமரகுருபரர் எப்படிப் பாடினாரோ அதே போல சீர்பிரிக்காமல் பாடல். பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. பொருள் புரிந்து இன்புற சீர் பிரித்து அப் பாடல். பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய்! எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர் கண்ணும் கருத்து நிறைந்தாய் , சகலகலாவல்லியே. பொருள் விளக்கம் பண்ணும் பரதமும் - இசையும் நடனமும் கல்வியும் தீஞ்சொல்பனுவலும் - கல்வியும் , இனிய சொற்களால் ஆன பாடல்களும் யான் எண்ணும் பொழுது - நான் எண்ணும் போது எளிது எய்த நல்காய் - எளிதாகச் செய்ய அருளவேண்டும் எழுதா மறையும் - ஓது...