பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.
-குமரகுருபரர்
பாடலின் பொருள்:
ஓதும் வேதத்திலும், ஐம்பூதங்களிலும், அடியவர்களின் கண்ணும் கருத்திலும் நிறைந்திருப்பவளே! கலைவாணியே!
நான் எண்ணும் போதெல்லாம் இசை, நடனம், கல்வி, இனிய பாடல்கள் முதலான கலைகளில் சிறந்து விளங்க நீ அருள வேண்டும்.
சொல்லும் பொருளும்
பண்ணும் பரதமும் - இசையும் நடனமும்
கல்வியும் தீஞ்சொல்பனுவலும் - கல்வியும், இனிய சொற்களால் ஆன பாடல்களும்
யான் எண்ணும் பொழுது - நான் எண்ணும் போது
எளிது எய்த நல்காய் - எளிதாகச் செய்ய அருளவேண்டும்
எழுதா மறையும் - ஓதும் வேதமும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் - வானம், பூ, நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களிலும்
தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.
-குமரகுருபரர்
பாடலின் பொருள்:
கடல் போல விரிந்த வடமொழி நூல்களையும்,
செழுமையான செல்வம் போலச் சிறந்த தமிழ் நூல்களையும் அடியவர்களின் நாவில் நின்று நிலைக்கச் செய்பவளே!
அனைவரும் விரும்பும் பாடல் இயற்றும் திறமையும் எல்லாத் துறைகளிலும் சிறந்த கல்வியும், சுவைபடக் கூறுகின்ற திறமையும் எனக்குள் பெருகி வளர்ந்திட அருள வேண்டும் கலைமகளே!
சொல்லும் பொருளும்
தூக்கும் பனுவல் - பாடல் இயற்றும் திறம்
துறை தோய்ந்த கல்வி – எல்லாத் துறைகளிலும் ஆளுமை தரும் கல்வி
சொல்சுவை தோய் வாக்கு – சுவைபடக் கூறும் திறமை
வடநூல் கடலும் - கடலளவு உள்ள வடமொழி நூல்களையும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - சிறந்த செழுமையான செல்வமாகத் திகழும் தமிழ் நூல்களையும்
Comments
Post a Comment
Your feedback