உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக.
19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார்அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ஜகதீஷ் சந்திரபோஸ்.
1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி) ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் அதிக ஆர்வம் காட்டினார்.
இங்கிலாந்தில் இருந்தபோது லார் ரிலே (Lore Rele) என்ற விஞ்ஞானியின் நட்பு போஸ்க்கு கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதல் மற்றும் தூண்டுதலின் பேரில் தாவரங்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் போஸ். கேம்பிரிட்ஜில் கல்வியை முடித்து இந்தியா திரும்பிய பிறகு கல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் விரிவுரையாளராக சேர்ந்தார்.
அப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடப்பில் இருந்ததால் ஒரு விநோதமான பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்திய மண்ணில் ஒரு வேலையைச் செய்வதற்காக ஒரு ஆங்கிலேயருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் அதே வேலையைச் செய்யும் இந்தியருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப்பழக்கம் அந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள் என்பதால் முழு ஊதியம் பெற தகுதியற்றவர்கள் என்பதுதான் அதற்குக்கூறப்பட்ட காரணம். ஜகதீஸ் சந்திரபோஸ் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை தனது அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி நன்கு கற்பித்ததோடு மட்டுமன்றி பல ஆராய்ச்சிகளையும் செய்தார். அவரது பணியில் முழு திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸ்க்கு முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க உத்தரவிட்டது.
அவ்வாறு கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார் போஸ். அந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அடிப்படையில் அவர் ஒரு இயற்பியல் வல்லுநராக இருந்தாலும் ரேடியோ வேவ்ஸ் (Radio waves) எனப்படும் வானொலி அலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார். உண்மையில் வானொலியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி மார்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிப்பரப்பு அமைப்பு முறையை போஸ் உருவாக்கிவிட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஆனால் அந்தக்கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் அப்போது கண்டுகொள்ளவில்லை என்றும் அந்தக்குறிப்பு கூறுகிறது
Comments
Post a Comment
Your feedback