விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்
என்பது கண்ணதாசன் எழுதிய பாட்டு.
விளக்கு என்பது தெய்வமாகவும், தெய்வத்தை ஆராதிக்கும் மங்கலச் சின்னமாகவும் காலங்காலமாகக் கருதப்பட்டு வருகிறது.
எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் வீட்டில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.
திருமந்திரம் நம் மனத்தை திருவிளக்கோடு சேர்த்துக் கூறுகிறது. விளக்கேற்றும் முன்பாக மனதில் நல்ல எண்ணங்கள்
மலர வேண்டும் என்பார் திருமூலர்.
மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கு மாயா விளக்கே.
என்பது திருமூலர் வாக்கு.
உள்ளத்தில் விளங்கும் விளக்கினை முதலில் ஏற்ற வேண்டும்.
கோபதாபம் என்கின்ற நெருப்பு மனதை விட்டு நீங்கி மனம் சாந்தமாக வேண்டும்.
பின் ஏற்றிய எல்லா விளக்குகளின் திரியைத் தூண்டினால் நம் மனத்தின் உள்ளே உள்ள ஒளி விளக்கானது என்றும் அணையாமல் நின்று சுடர் விடும்.
‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்பது அருணகிரி நாதர் வாக்கு.
‘சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே’ என்பது மாணிக்க வாசகப் பெருமானின்
திருமொழிகள்.
இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பவொளியில் திளைத்த பெருமக்கள் விளக்கை இறைவனின் வடிவாகவே கண்டனர்.
சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் முல்லைப்பாட்டு பாவை விளக்கைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகிறது.
‘பாவை விளக்கில் பரூஉ சுடர் அழல
இடம் சிறந்து உயரிய ஏழுநிலை மாடத்து'
என்பன முல்லைப்பாடல் அடிகள்.
பாவை விளக்கு என்பது பெண் ஒருத்தி விளக்கை ஏந்தி நிற்பது போன்ற கலை வடிவம் ஆகும்.
பொதுவாக கோவில் தூண்களில் கற்சிற்பங்களாக பாவை விளக்கு அமைக்கப்பட்டிருக்கும்.
அரிதாக ஆண் பாவை விளக்கும் கோவில்களில் உள்ளன.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மூலவர்
சந்நிதியில் ஆண் பாவை விளக்கு உள்ளது.
மராட்டிய மன்னரின் மனைவி திருவிடை மருதூர் கோவிலுக்குப் பாவை விளக்கை
நேர்த்திக் கடனாக வழங்கிய செய்தி, அக்கோவிலில் உள்ள பாவை விளக்குச் சிலையின் அடிப்புறத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment
Your feedback