நிலத்தின் இயல்புக்கு ஏற்ற தாவரங்களே மண்ணுக்கு நன்மை பயப்பன. அந்த மண்ணுக்கேற்ற தாவரங்கள் இயல் தாவரங்கள் எனக் கூறப்படும். தொல்காப்பியம் சொல்லும் இயல் தாவரங்களுள் பனையும் (போந்தை) ஒன்று.
பனந்தோட்டுடன் பூக்களை வைத்துச் சூடுதல் பண்டையமரபு. பதிற்றுப்பத்தும் புறநானூறும் சிலப்பதிகாரமும் இம்மரபைக் கூறுகின்றன.
பனை புல்லினத்தைச் சேர்ந்தது என தொல்காப்பியம் சுட்டும். மித வெப்பமண்டலப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவே நீர்த் தேவையைக் கொண்ட பனை வறண்ட நிலங்களிலும் மனித முயற்சியின்றி இயல்பாக வளரும் தன்மையுடையது.
தொல்காப்பியம், குறுந்தொகை தொடங்கி இலக்கியங்களில் பதிவு பெற்றுள்ளதன் மூலம் பனையின் பயன்பாடு அதிகமாக இருந்ததையும், பனைமரங்களின் சூழலியல் முக்கியத்துவத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்ததையும் நாம் உணரலாம்.
பனையானது மிக நீளமானதும் உறுதியானதுமான சல்லி வேர்த் தொகுப்பைப் பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்க பண்டைத் தமிழரால் பயன்படுத்தப்பட்டது.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் அழிக்கப்படும் போதும், அடர் மரங்கள் இல்லாத நிலங்களிலும் உயிரினங்களின் உயிர் ஆதாரமாகப் பனைமரங்களே விளங்குகின்றன.
பனையின் வேர்ப் பகுதியின் குமிழ் போன்ற பருத்த சல்லி வேர்களுக்கு இடையே சிறு பூச்சிகளும் எறும்புகளும் வாழ்கின்றன. நடுத்தண்டுப் பகுதி ஓணான், பல்லி இனங்களின் வாழிடமாக அமைகிறது. தலைப்பகுதியில் அமைந்துள்ள ஓலைச் செறிவினுள் வெளவால்களும், சிறு குருவிகளும் வாழ்கின்றன. அவ்வாறு வாழும் புள்ளினங்கள் இரவுப்பொழுதிலும், பகற்பொழுதிலும் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஈக்களையும், கொசுக்களையும் இரையாக்கிக் கொள்வதால் அளவுக்கதிகமான பூச்சியினங்களால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க பனையை வாழிடமாகக் கொண்ட உயிர்கள் முக்கியக் காரணிகளாகின்றன.
பனையின் தலைப்பகுதி அணில்களுக்கும் வேர்ப்பகுதி எலிகளுக்கும் பாதுகாப்பான வாழிடத்தை அளிக்கிறது.
உயரப் பறக்கும் பறவைகளான எழால், வல்லூறு போன்றவற்றிற்கு தங்கி ஓய்வெடுக்கும் தற்காலிக ஓய்வில்லங்களாகத் திகழ்வதுடன், அவ்வாறு அமர்ந்து தரையில் திரியும் எலிகளைக் கவனித்து இரையாக்கிக் கொள்வதன் மூலம் ஒரு பனைமரம் ஒரு சூழலியல் சமனிலை பேணுவதில் பெரும்பங்காற்றுகிறது.
பனைமரம் ஓங்கி வளரும் இயல்புடையதாதலால் பல உயிரினங்களுக்கும் எதிரிகள் அண்டாத பாதுகாப்பான வாழிடத்தையும், கூடுகட்டி இனவிருத்தி செய்ய ஏற்ற இடத்தையும் அளிக்கிறது.
பனைமரம் பட்ட மரமாகி, மொட்டை மரமாக நிற்கும் போதும் அதன் புறக்காழ் பொருந்திய தன்மையினால் தண்டுப் பகுதியில் துளையிட்டு பறவைகள் வசிக்கவும் முட்டையிட்டுப் பாதுகாப்பாக குஞ்சு பொரிக்கவும் இடமளிக்கிறது.
அருகி வரும் உயிரினங்களான பச்சைக்கிளி, பனங்காடை, மைனா, கூகை, உடும்பு, மரநாய் ஆகியவற்றுக்கும் பனை வாழிடமாகிறது.
இயல் தாவரங்களில் பயன்மிகு மரங்களுள் தலைசிறந்த பனை தென்னை மரத்தின் வரவால் முக்கியத்துவம் இழந்து வருகிறது.
“பனை நம் மாநில மரம். தமிழகத்தையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் மரம். போந்தை என்று அழைக்கப்பட்ட பனையின் பூ சேரமன்னர்களின் சின்னமாக விளங்கியது. பண்டைய இலக்கியத்தில் இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது காணப்படாமைக்குக் காரணம் தெங்கு என்றழைக்கப்பட்ட தென்னையின் வரவுதான். பனைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அனைத்தும் தென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது” என்று கூறுகிறார் தாவரவியல் அறிஞர். கிருஷ்ணமூர்த்தி.
பனைமரத்தின் உறுதித் தன்மை வாழிடம் அமைக்க பனங்கை என்ற தண்டுப் பகுதியைத் தருகிறது.
பதநீர், பனங்கற்கண்டு என்ற உணவுப் பொருள்களையும், பாய், கூடை, வித்திடு பெட்டிகள் தயாரிக்க ஓலைகளையும் தருகின்றன.
கூட்டமான மரங்களைக் கொண்ட காடுகள் நாளும் நாளும் அழிவைச் சந்திக்கும் நிலையில் வாழிடமற்ற பல உயிரினங்களுக்கு பனை மரமே புகலிடமாக விளங்குகிறது. ஆனால் பனைமரங்களும் மனிதர்களால் அற்பத் தொகைக்கு எரிபொருளாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
ஓலைச் சுவடிகள் வடிவில், தமிழ் இலக்கியங்களுக்கு உயிர் கொடுத்து அழிந்துவிடாமல் காத்த பனையோலைகள் இன்று அழிவின் விளிம்பில் நிற்க மனிதர்களின் பேராசையும், அறியாமையும் காரணமெனினும் கரும்பு போன்ற பணப்பயிர்களின் முக்கியத்துவமும் காரணமாகிறது. கரும்பு போன்றவற்றின் தாக்கம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.
கரும்பும் இம்மண்ணுக்கேற்ற ஒரு இயல் தாவரம்;. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழரால் பயன் நுகரப்பட்ட தாவரம். எனினும் பனையின் முக்கியத்துவத்தைக் குறைத்ததில் தென்னைக்கு முன்பாகவே கரும்புக்குப் பங்கிருப்பதாகக் கூறலாம்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூட, பனைமரம் ஏறுபவர்கள் செல்வந்தர்களாகவும், சமூகத்தில் பெருமை மிக்கோராகவும் இருந்தனர். கரும்பின் தாக்கத்தால் அந்நிலை மாறத் தொடங்கியது. பனையிலிருந்து கிடைக்கப் பெறும் பதனீரைக் காய்ச்சி பனைவெல்லமும், கருப்பட்டியும் செய்யப்பட்டன. இனிப்பின் தேவையை பனை கொண்டு நிறைவு செய்த சமூகம் கரும்பிலிருந்து இனிப்புப் பொருட்களையும், சர்க்கரையையும் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டது.
பனை வறண்ட நிலத்திலும் வளரும். ஆனால் கரும்பு நீர்த் தேவை அதிகம் கொண்ட தாவரம். நீரின் தேவை குறைவு என்பதால் பனைமரங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் பெருகினாலும் சூழல் சமனிலை பாதிக்கப்படுவதில்லை.
கட்டற்ற கரும்பு சாகுபடி உணவு, பண்டமாற்று என்ற நிலைகளைக் கடந்து வணிகப் பொருளாக நாளடைவில் மாற்றமடைந்தது. பலவகையான சிறு தானியங்கள் பயிரிடப்பட்டு நிலத்தின் வளம் சீராகப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அத்தானியங்களின் விளைநிலங்களான காடுகள், செயற்கை நீர்நிலைகள் துணையோடு கரும்பு பயிரிட ஏற்றவையாக மாற்றப்பட்டு, கரும்பு போன்ற பயிர்களை மட்டுமே பயிரிடும் நிலையை நோக்கி நகரத் துவங்கின.
கரும்புப் பயிரின் விளைச்சல் பரப்பு அதிகமாவது சிறு தானியங்கள் விளைச்சலைக் குறைப்பதில் நேரடிப் பங்குகொள்கிறது. பனை போல பல்லுயிர் வளம் பேணும் உயிர்ச் சூழல் கரும்புக்கு இல்லை.
கரும்பின் வழி வந்த வணிக முனைப்பு, சூழல் குறித்த கவனத்தை மழுங்கடிதத்து. பனை போன்ற மண்ணுக்கும், உயிர்களுக்கும் நலம் பயத்து வந்த தாவரங்கள் எண்ணிக்கையில் பெருகுவதைத் தடுத்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பனை ஏறுபவர்களைக் கட்டுப்படுத்;த மரம் ஏற உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் கிழக்கிந்தியக் கம்பெனியில் சீமை மதுவுக்கு முக்கியத்துவம் தருவதற்காக பனைக்கள்(பனங்கள்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினர். இன்றும் கூட இதே நிலைதான் நிலவுகிறது. ஆங்கிலேயர்கள் கரும்பிலிருந்து வெள்ளைச் சர்க்கரையைப் (சுக்ரோஸ்) பிரித்தெடுத்து தேநீர் போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினர்.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் கரும்பு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, கரும்பு ஆலைகள் எண்ணிக்கையில் பெருகத் தொடங்கி, முழுமையான வணிகப் பணப்பயிர் என்ற நிலையை கரும்பிற்கு வழங்கியது. இதன் விளைவாக நீர்த்தேவையை நிறைவு செய்ய ஆழ்துளைக் கிணறு வழி நீர் உறிஞ்ச, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குறைந்த நீர்த் தேவையில் வளர்ந்து வந்த தாவரங்களின் அழிவுக்கு வழிகோலியது.
கரும்பால் விளைச்சல் அருகிய அல்லது முற்றாக அழிக்கப்பட்ட பிற சிறு தாவரங்களை தேடவேண்டியுள்ளது.
பிரேசில் போன்ற நீருக்குப் பஞ்சமில்லாத இடங்களுக்கு ஏற்ற கரும்பு பயிரிடல், நீர்ப்பற்றாக்குறையுள்ள நிலங்களில் ஊறு விளைவிப்பதாக மாறுகிறது. எனவே கரும்பைப் பயிரிடுவதால் பாதிக்கப்படும் வாழ்வாதாரங்களை நோக்க, நீர்ப் பயன்பாடு குறைவாக உள்ள பிற தாவரங்களைப் பயிரிட வேண்டும்.
Comments
Post a Comment
Your feedback