இன்றைய தெருக்கள் எப்படி இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்மைப் போல நாகரிகம் இல்லாத நாட்களில் அந்தத் தெருக்கள் எப்படி இருந்திருக்கும்?
மருவூர்ப்பாக்கம்
என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு இடம். அங்கிருந்த ஒரு தெரு வழியே நாம் நடந்து போனால் என்னவெல்லாம் பார்க்கலாம்?
அதை நேரலையாகப் பார்ப்பது போல சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காட்டுகிறார்.
அந்தத் தெரு வழியே ஒரு பயணம்.
இது தான் தெருவோரத்தில் நாம் காணும் காட்சி.
மேனியில் அழகுக்காகப் பூசும் வண்ணப் பொடிகள், மணத்துக்காக உள்ள பொடிகள், சந்தனம், பூ, அகில் போன்ற புகையும் பொருள்கள், மணத் தூவிகள் (perfume) முதலானவற்றை விற்றுக்கொண்டு நகர-வீதியில் நடமாடும் வணிகர்கள் திரிகின்றனர்.
வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவும், புகையும், மேவிய விரையும்
பகர்வனர் திரிதரும் நகர வீதியும்;
அடுத்து,
பட்டு, மயிர், பருத்தி முதலானவற்றில் நூல்களை நூற்று ஆடையாக நெய்யும் காருகர் வாழும் இருப்பிடங்களைப் பார்க்கிறோம்.
பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்,
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
(காருகர் என்றால் நெசவாளிகள்)
அடுத்து,
பட்டாடைகள், பவளங்கள், பூ-மாலைகள், அகில் கட்டைகள், முத்துக்கள், மணிக்கற்கள், பொன்னணிகள் - இப்படிப் பல பொருட்கள் அளவிட முடியாதபடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் தெருக்கள் இருக்கின்றன.
(அகில் புகை கூந்தலுக்கு மணம் ஊட்ட)
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மணியும், பொன்னும்,
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா
வளம் தலைமயங்கிய நனந்தலை மறுகும்;
அடுத்து,
தரம் வாரியாகப் பிரித்து அளந்து தர குவித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் நிறைந்த வீதிகள் இருக்கின்றன.
பால் வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
அடுத்து,
பிட்டு விற்கும் காழியர்,
அப்பம் சுட்டு
விற்கும் கூவியர்,
கள் விற்கும் பெண்கள்,
மீன் விற்கும் பரதவர்,
கல் உப்பு விற்போர்,
வெற்றிலை விற்கும் பாசவர்,
சூடம், சாம்பிராணி போன்ற வாசனைப் பொருள்களை விற்பவர்,
பலவகையான புலால், கறிகளை விற்கும் ஓசுநர் (கசாப்புக் கடையர்கள்(!)
ஆகியோரின் இருப்பிடங்கள் இருக்கின்றன.
காழியர், கூவியர், கள் நொடை ஆட்டியர்,
மீன் விலைப் பரதவர், வெள் உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல் நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும்;
அடுத்து,
வெண்கலப் பொருள்கள் செய்வோர்
செம்புப் பொருள்கள் செய்வோர்
மரப் பொருள்கள் செய்யும் தச்சர்
இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர்
கஞ்சகாரரும்,
செம்பு செய்குநரும்,
மரம் கொல் தச்சரும், கருங் கைக் கொல்லரும்,
சிற்பங்கள் செய்யும் கண்ணுள்-வினைஞர், ஓவியர்
மண்ணில் பொம்மைகளும்
பாண்டங்களும் செய்யும்
வனைவர்,
பொன்னில் அணிசெய்யும்
பொற்கொல்லர்,
நவமணி தொழில் புரியும் இரத்தினத் தட்டார்,
உடைகள் தைக்கும்
தையல் காரர்கள்,
தோல் பொருள் செய்யும் செம்மார்,
கிழிந்த துணியில் பொம்மை செய்வோர்
இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் என எல்லோரும் சேர்ந்து வாழும் இடங்கள்
கண்ணுள் வினைஞரும், மண்ணீட்டு ஆளரும்,
பொன் செய் கொல்லரும், நன்கலம் தருநரும்,
துன்னகாரும்,
தோலின் துன்னரும்,
கிழியினும் கிடையினும் தொழில் பல பெருக்கி,
பழுது இல் செய்வினைப் பால் கெழு மாக்களும்;
குழல் யாழ் எதுவாகிலும் ஏழு பண்களையும்
திறன் பொருந்தப்
பாடும் வல்ல இசை மரபார்ந்த
பாணர்கள் வாழும் இல்லங்கள் இருக்கின்றன.
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும்,
வழு இன்றி இசைத்து, வழித் திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறு தொழில் செய்தும் பிறர் ஏவல் ஏற்றும் வாழ்க்கை ஓட்டி
வாழ்வோர் என எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக வாழும் இடம் மருவூர்ப் பாக்கம் என முத்தாய்ப்பாக முடிக்கிறார் இளங்கோவடிகள்.
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -
நாம் இருக்கும் இந்தக் காலம் தான் நாகரிகம் வளர்ந்த காலம் என்று நினைத்திருப்போரை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும் இந்த மருவூர்பாக்கம்.
சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - - இந்திரவிழவு ஊர் எடுத்த காதை
Comments
Post a Comment
Your feedback