மனப் பெண்ணே! எதை நீ நினைக்கிறாயோ அதை மட்டும் பற்றிக் கொண்டே ஊசலாடுகிறாய். அடுத்தது, அடுத்தது என எதற்கோ அலைந்து கொண்டிருக்கிறாய். இது நல்லது, இதை சிந்தித்துப் பார் என்று நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாய். இது வேண்டாம், இதை விட்டு விடு என்று நான் சொல்வதை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்கிறாய். எதைச் செய்து கொண்டிருக்கிறாயோ அதையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறாய். புதியதாக எதையாவது பார்த்தால் புத்தி தடுமாறுகிறது. அந்தப் புதியதே வேண்டும் என்று தவிக்கிறாய். புதியதை ஏற்றுக்கொள்ளவோ அஞ்சுகிறாய். தேனை உண்ட வண்டு மீண்டும் அந்தப் பூவையே சுற்றிச் சுற்றி வருவது போல அங்கும் இங்கும் சுற்றிவிட்டு மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கிப் போகிறாய் . இந்த அழகில் எல்லாம் பழையதாகவே இருக்கிறது; எதுவும் புதிதில்லை என்ற சலிப்பு வேறு உனக்கு. எதெல்லாம் இழிந்ததோ அதையெல்லாம் விரும்பிச் செய்கிறாய் கண்டதெல்லாம் விரும்பிச் சுவைக்கும் காக்கை போல. ஏன் இப்படி? மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டு...