காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்குபொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால் வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நிலமக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளைக் காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழிப் பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது. பயன்பாடு: புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம். பெரும்பாலான அறிஞர்கள் புழங்குபொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வ...